மட்டு நகரும் மத்திய கல்லூரியும்.........

தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு....

வணக்கம்,
இரண்டு தடவைகள் தங்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தேன்.எனது பதிவு இன்னமும் பின்னூட்டங்கள் திரட்டப் படாமலேயே உள்ளது.ஒருவேளை நான் தவறாக தெரிவித்துள்ளேனோ தெரியவில்லை.www.thamizmanam.blogspot.com என்ற பதிவில் இரண்டு முறை பின்னூட்டம் இட்டிருந்தேன். என்ன பிஅரச்சனையெனத் தெரியாததால் ஒரு பதிவாக் இதனை இடுகிறேன்.

இதனை எனது வேண்டு கோளாக ஏற்று மறுமொழியைத் திரட்டுமாறு வேண்டுகிறேன். உங்கள் மேலானா சேவைக்கு எனது நன்றிகள்.
தோழமையுடன்
சோமி

முற்றவெளி . . .

மட்டக்களப்பின் மையப்பகுதி,
'மட்டக்களப்பு மாநகரசபை'என்ற பெரிய பெயர் பலகை,உயர்ந்து நிற்கும் காட்டடம் அதன் அருகே வாவியோரத்து முற்றவெளி, முன்னால் வெபர் மைதானம் அல்லது முற்றவெளி மைதானம்.கோட்டைச் சுவர் இவையனைத்தையும் இராணுவகச் சுருள் முட்கம்பிகளினூடே ஆவலாய்ப் பார்த்தன என் கண்கள் ஆயுதம் தரித்த 3 இராணுவத்தினரது கண்களும் 2 பொரிஸ்காரரது கண்களும் ஆயுதம் வைத்திருக்கும் இன்னுமொரு நபரது கண்களும் சமகாலத்தில் என்னைப் பார்த்தன.இண்டைக்கு இதை பார்க்கும் எனக்கு வயது 25.இன்றைய தேதி ஜூன் 15,2006.



(மட்டக்கள்ப்பு உயர் பதுக்கப்பு வலையம்)


ஒரு நாள் மட்டக்களப்பு முற்றவெளி அலங்கரிக்கப் பட்டிருந்தது. மாலைப் பொழுதிலிருந்தே எக்கச்சக்க கூட்டம். சிறிதரன், மாபி என்கிற சிறீபவன்(மாப்பிளையின் சுருக்கம்) பவுச்சா இன்னும் சிலர் வின்சற் மகளீர் பாடசாலைக்கு அருகில் இருக்கும் மகளிர் விடுதிக்கு முன்பு சீமைப் பனைகளுக்கு கீழே நின்று கொண்டிருந்தனர்.
அன்றைய காலகட்டத்து இளைஞர்களுக்கு இந்தப் பகுதி மிகப் பெரும் பொழுது போக்குப் பிரதேசம்."இண்டைக்கு யாரெல்லம் பாடபோறாங்களாம்" என்று கேட்கும் சிறிதரனுக்கும் வயது 25 தான்.

அது ஒரு பெரிய இசை விழா, ஏ.ஈ.மனோகரன் குரல் மட்டக்களப்பு மையப் பகுதி வரை ஒலிக்கிறது. "மட்டு நகர் மரகத வீணை மீன்பாடும்..... " இலங்கையின் முன்னணி பொப் இசை பாடகர்களும் மெல்லிசைப் பாடகர்களும் பாடிகொண்டிருகிறார்கள்.பொப் பாடல்களுக்கு மட்டக்களப்பு இளைஞர்களின் ஆட்டம் பலமாக இருகிறது.

முற்றவெளி முழுவதும் சரியான கூட்டம். மாநகரசபைப் பகுதி ஒளிவெள்ளத்தில் தெரிகிறது. சறோயினி,மலர்,தேவகி இன்னும் சில பெண்கள் அப்பா அம்மவோடு கோட்டைக்கும் அரச அதிபர் பங்களாவுக்குமிடைப்பட்ட ஆற்றங்கரைப்பகுதியில் உட்காந்திருக்கிறர்கள்.எல்லா இடமும் துள்ளல் பாட்டும் மெல்லிசைப் பட்டும் இரவு 11 மணி தாண்டிக் கேட்டுக் கொண்டிருகிறது.

தா தையத்தைய தா தையத்தைய....... வந்தேன் இராவண மகாராசன்.... தென்மொடிக் கூத்து சத்தம் முத்தவெளியில் இருந்து வருகிறது.

"என்ன கூத்துக்கு போறயா? ஆரு நம்மட கன்னங்குடா சினத்தம்பி அண்ணாவியாரா போடுறாரு?"

"ஓண்டா......"

"மறுகான்ன நானும் வாறன் அவர் போடுற கூத்த பாத்திட்டே இரிக்கலாமெல்லுவா....."
"அவளுகளும் கூத்து பாக்க போயிரிக்களுகள்......நீ அவளுகளப் பாத்து கூத்தாடாமவுட்டா சரி"


(இது இன்றைய கூத்துப் படம் 2003 இல் மட்ட்க்களப்பில் நடந்தது.)

முழுநிலவு நாளில வருசா வருசாம் முத்தவெளியில நடக்கிற கூத்து அதிகம் பிரபலமானது.தென்மோடி வடமோடி 2 வகை கூத்தும் வருசா வருசம் மாறி மாறி நடக்கும்.தர்மபுத்திரன் கூத்தும் இராவணன் கூத்தும் பிரபல்யமானவை விடிய விடிய முற்றவெளி களை கட்டியிருக்கும்.

என்ன....இதெல்லம் எப்ப நடந்திச்சு தெரியுமா? நான் பிறக்கிறதுக்கு முந்தி அதாவது 25 வருசத்துக்கு முந்தி. அப்பாதான் இந்தக் கதையளச் சொன்னார்.அதில இருக்கிற சிறீதரன் என்ர அப்பாதான்.நான் பிறந்த பிறகும் கூட மட்டக்களப்பில கூத்து நடந்ததாம்.90க்கு பிறகுதான் முற்றாக நின்று போய் விட்டது.அதுக்குப் பிறகு இந்தப் பகுதி முழுமையான இரணுவலையமாகப் போய்விட்டது.இந்தியன் ஆமியும் முத்தவெளியில தங்கியிருந்தவனுகள்.இப்ப இலங்கை இரணுவம் இருக்கு.

92 இல் நான் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மாணவனாக சேர்ந்து கொண்டேன்.

"சேர் றில்(உடற் பயிற்சி கண்காட்சி க்கான தயார்ப் படுத்தல்) பழகுறதுக்கு இண்டைக்கு எத்தினை மணிவரைக்கும் முத்தவெளிக்குள்ள விடுவானுகள்".

"காலையில 7 மணியில இருந்து 11 மணிவரைக்கும் "
எனது கேள்விக்கு சுரேசாநந்தம் சேரிடமிருந்து வந்த பதிலிது.

இப்ப நாங்க போவதற்கு அனுமதிக்கப்படும் முற்றவெளி முன்பு டச்சு மற்றும் ஆங்கிலேயர் காலத்து மயானமாக இருந்ததாம்.அருட் தந்தை வெபர் அவர்களின் முயற்சியால் இது பின்னர் மைதானமாக மற்றப் பட்டது இதனால் இதற்கு வெபர் மைதானம் என்று பெயர் சூட்டப் பட்டது. உணமையில ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் முற்றவெளியிலதான் கூத்து நடந்தது.அந்தப் பகுதியை இதுவரை நான் கண்ணால் கூடப் பார்த்தது இல்லை.எங்களுக்கு இது மட்டும்தான் முத்தவெளி.

இதுதான் மட்டக்களப்பு நகரில் இருக்கும் நான்கு பாடசாலைகளுக்கான ஒரே மைதானம்(புனித மிக்கேல் கல்லூரி,மெதடிஸ்த மத்திய கல்லூரி,விசன்ற் மகளிர் உயர்தப் பாடசாலை,புனித சிசிலியா மகளிர் பாடசாலை ஆகியவை அந்த நான்கு பாடசாலைகளுமாகும்) எங்கள் பாடசாலை விளையாட்டுப் போட்டி காலத்தில் மட்டும் இந்த மைதானத்தை முழுமையாக எங்களால் உபயோகப் படுத்த முடியும்.மைதானத்தை சுற்றி இராணுவ பாதுகாப்பு அரண்கள் இருக்கும்.கிட்டத்தட்ட ஒரு இராணுவப் பாடசாலை மாணவர்களைப் போல சூழல் எங்களை மாற்றி விட்டிருக்கும்.

ஆன, அப்ப எங்களுக்கு அது பெரிய பிரச்சனையே அல்ல வின்சன்ட் ,கொன்வெண்ட் பொம்பிளப்பிள்ளையள் வரும் அதுகளும் நாங்களும் ஒரே மைதனத்தில் இருப்பது என்பது ........எவ்வளவு பெரிய நிகழ்வு.நான் மாணவத் தலைவனாக இருக்கையில் மற்ற மாணவர்களை ஒழுங்கு படுத்துறது. உத்தியோக பூர்வத்த தொடர்புகளை வைத்துக் கொள்ளுவது எண்டு வின்சன்ற் ,கொன்வென்ற் பிள்ளையளுக்க அறிமுகமாகிறதுக்கு எடுத்த பிராயத்தனங்கள் எத்தனை நான் மட்டுமில்ல என் சக மாணவ தலைவர்களும் எனக்கு முன்பிருந்தவர்களும் கூட......நாலு பொம்பிளப் பிள்ளையளுக்கு நம்மள தெரிஞ்சா அது நமக்குப் பெருமை எண்டுற காலமது.

வருசத்தில ஒருக்கா வெசாக் பண்டிகை(புத்த பகவான் ஞானம் பெற்ற காலம் இது யுனஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட சர்வதேசப் பண்டிகை) இந்த மைதானத்தில கொண்டாடப் படும் அண்டைக்கு மட்டுதான் நங்கள் இந்தப் பகுதியில் ஒளியூட்டப் பட்ட இரவினைப் பார்க்க முடியும்.

"ஆச்சித்தப்பர லாளிலா பீச்சித்தப்பர லாளிலா ஆச்சித்தப்பர பீச்சித்தப்பர லாளிலாளி லாளிலா...."
சிறிலங்கா இராணுவ இசைகுழுவின் சிங்களப் பைலாப் பாடல்கள் அந்த முத்தவெளியை வியாபித்திருக்கும்.அன்றைக்கு ஒருநாள்தான் இரவில் வெளியில் வருவதற்கு அனுமதி என்பதால் சிங்களப் பாடல்களின் இடையே ஒலிக்கும் தமிழ்படல்களையாவது கேட்போம் என்று ஒரு பெரிய கூட்டம் வரும்.

விளையாடுவதற்கு இராணுவம் அனுமதித்த நாட்களில் இந்த பகுதி முழுமயினையும் பார்ப்பதற்கு ஆர்வப்பட்டு இரணுவப் பகுதிகளுக்குள் ஒரு நாள் உள்நுழைந்தோம்.துப்பாக்கி முனையில் ஒருமணி நேரம் வைத்திருந்துவிட்டு பின்னர் ஆசிரியர் முன்னால் எங்களை விடுவித்தனர் அதுவும் தண்ணிகுடிக்க வந்தம் தெரியாமல் வந்து விட்டோம் என்று சொன்ன பிறகு.

இலங்கை இராணுவத்தின் மட்டக்களப்பு தலைமையகம் இதுதான். எமது முத்தவெளியில்தான் இராணுவ உலங்கு வானூர்திகள் தரையிறங்கும்.இராணுவத்திற்கு பயிற்சிகளும் இந்த மைதானத்தில் வைத்து கொடுக்கப்படும்.
பெண்கள் பாடசாலை மாணவிகள் பயிற்சியில் ஈடுபடும் சமயங்களில் பெரும்பாலும் ஆண்கள் பாடசாலை மாணவர்களை உள்ளே விடுவதில்லை.இந்தப் பொழுதுகளில் அரைக் காற்சட்டை இராணுவத்தினர் மைதனத்தில் நிறைந்திருப்பர்.அவர்கள் செய்யும் பல சேட்டைகளை என் தங்கைகள் சொல்லக் கேட்டிருகிறேன்.

அப்போது என்னோடு படித்த ஒரு நண்பனொருவனுக்கு இதெல்லம் பார்க்கும் போது ஆத்திரமாதிரமாக வரும்.அவனுக்கு மட்டுமல்ல நாங்களும் இராணுவத்தை திட்டிகொள்ளாத நாட்கள் குறைவுதான்.மட்டக்களப்பின் மிக அழகான பகுதியொன்றை மயானமாக்கிவிட்டிருக்கும் இராணுவம் எங்களுக்கு பயங்கரமாகவே தெரிந்தனர்.

"இவனுகளை இங்கயிருந்து விரட்டணும்.நம்மட மைதானத்தில விளையாட நம்மள வுடுறதுக்கு அவனிட்ட கையேந்தோனுமாம் நிங்க போய் இளிச்சிக் கொண்டு நில்லுங்க.....அவனுகள் என்ன சோக்கா நம்மட இடத்துல விளையாடுறானுகள்"

இரணுவத்தினர் கிறீக்கற் உதைப்பந்தாட்டம், கூடைபந்தாட்டமெல்லம் வேளையாடுறதை மைதானத்தின் கம்பி வேலிகளுக்கு வெளியே இருந்து பார்க்கும் எங்களுக்கு கோவம் வரும்.அவன் இதையெல்லம் பார்த்து கொதித்துப் போவான்.

அந்த நண்பன் 1998 இல் படுவான்கரைக்குப் போனான். சமதான பேச்சுவார்த்தக் காலத்தில் அவனை கொக்கட்டிச்சோலையில் சந்திதேன். விடுதலைப் புலிகள் இயக்கதில் இருப்பதாக சொன்னான்.அவனை சந்த்தித்துவிட்டு வரும் போது என்னை கூட்டிச் சென்ற இன்னுமொரு நண்பன் சொன்னான்
"இவன் இப்ப ஆட்லறி பிரிவில இரிக்காண்டா............."

இப்போது 2006 இல் நிலமை இன்னும் மோசம் இந்தப் பகுதிக்கு அவசரத் தேவைக்கு மட்டும் என் நண்பர்கள் போய் வருவதாகச் சொன்னர்கள்.என்னையும் சும்மா போகத்தேவையில்லை என்றார்கள். அஞ்சல் அலுவலகம்,மெத்டிஸ்ட் ஆலாயம்,வில்லியம் ஓல்ட் மண்டபம்,மகளிர் விடுதி, வின்சன்ற் பாடசாலை இவற்றுக்கு போபவர்கள் மட்டும் போய்வருகிறார்கள்.முன்புபோல் சீமைப் பனைகளுக்கு கீழ் இராணுவம் விளையாடுவதை வேடிக்கை பார்க்கும் இளைஞர்களைக் கூடக் காணவில்லை.(கிளைவிடும் பனைமரமே சீமை பனைகள் இவை பனங்காய் போல ஒருவகை காய்களை காய்க்கும். ஒரு சில இடங்களில் மட்டும் இருக்கும் அரிய வகை இனம்)

துப்பாக்கி ஏந்திய அவர்களின் கண்கள் தொடர்ந்தும் என்னை நோக்கியே இருந்தன நண்பன் அவசரப் படுத்தினான் டேய் அவனுகள் உன்னப் பாக்கிறானுகள். நீ புது ஆள் பிரச்சனை வாரதுக்குள்ள கிளம்பணுண்டா.

சரியென்று ஹாயியார் ஹொட்டலுக்கு போவதற்காக வண்டியைத்திருப்பினோம்....

பெரியதொரு வெடியோசை ...

ஒரு பதட்டம்.....

ஹாயியார் கடைக்குள் நாம் ....

இன்னுமோரு சத்தம்......

பதட்டம் கூடியது.......

நண்பன் சொன்னான் படுவங்கரையில் இருந்து ஆட்லெறி வருகுது. முத்தவெளிக்கு பின்னால விழுந்திரிக்கலாம் இவனுகளுக்கு எதும் சேதமெண்டால் சிக்கல்.

என் பழைய நண்பண் எனக்கு நம்பிக்கை தருவதற்க்காக இதை அடித்திருக்க கூடுமோ....
என் மனது சொல்லியது. . .

***

(படுவான்கரை மாட்டக்களப்பு ஆற்றின் மேற்க்கு பகுதி இங்கு சூரியன் படுவதால்(மறைவதால்) இந்தப் பெயர் வந்தது கிழக்கு பகுதியில் சூரியன் எழுந்து(உதிப்பது) வருவதால் மட்ட்க்கள்ப்பு நகரம் இருக்கும் பகுதிக்கு எழுவான்கரையென்று பெயர்.படுவான்கரை முழுவதும் புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ளது.)

மீன்கள் பாடிய தேசமொன்றில் படித்து திரிந்த போது...

இலங்கையின் மிகப் பழமையான கல்லூரியில் பயின்ற கலமும் மட்டக்களப்பு மண்ணில் சுற்றித்திரிந்த நாட்களும் இப்போது நிறைய நிறைய நினைவுக்கு வருகிறது.என்னை போலவே இன்று உலகம் முழுவதிலும் சுற்றிக் கொண்டுதிரியும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் ஊற்றான எனது கல்லூரி குறித்து இணையங்களில் அவ்வளவு அதிகமாகக் காணக் கிடைக்கவில்லை.


எனது இந்த பதிவின் நோக்கம் அன்றைய எனது பொழுதுகளையும் நண்பர்களையும் சம்பவங்களையும் மீட்டிக் கொள்ளுவது.
அத்தோடு மட்டக்களப்பு பற்றிய தகவல்கள் சேதி களைச் சொல்லுவதும்.

சீமைப் பனைகள்,வாவியோரத்து இருக்கைகள், முற்றவெளி,காதல் வீதி ,கிழங்குக் கடைகள்(உலகில் எங்கு தேடியும் கிடைகாத அற்புத்க் கடைகள் இது பற்றி பெரிய கட்டுரையே எழுதலாம்.)என்று பள்ளிக்காலத்தில் துள்ளிதிரிந்த இடங்களை எவன் மறப்பான்.

இந்த பதிவினைப் பார்க்கும் நிறைய பேருக்கு மட்டக்களப்பைத் தெரிந்திருக்கும் வாய்ப்பு இருகிறது.இலங்கையின் கிழக்கு பகுதியில் அல்லது தமிழீழத்தின் தென் பகுதியில் அமைந்திருக்கும் கடலும் கடல்நீரேரியும் சூழ்ந்த மீன்கள் துள்ளிவிளையாடும் அழகான நகரம்.ஒரு காலத்தில் பாடித்திருந்த மீன்களின் பட்டைக் கேட்டதாக எமது கல்லூரி முன்னாள் அதிபர் காசிநாதர் எழுதியுள்ளார்.இப்போது அந்தப் பாட்டை கேட்க முடியவில்லை.
மட்டக்களப்பை விட்டு நிறையத்தூரம் வந்த பின்னர்தான் அதன் அழகு தெரிகிறது. எனக்கு தெரிந்து இலங்கயில் உள்ள அழகான நகரங்களுக்குள் மட்டக்களப்பை முதல் வரிசையில் வைக்க முடியும்.

கவிதையில் காசி ஆனந்தன்,சினிமாவில் பாலு மகேந்திரா என்று நமக்கு நெருக்கமாக
இப்போது இருபவர்கள் முதல் இலங்கை பத்திரிகையுலகில் குறிப்பிடத்தகுந்தவர்களான எஸ்.டி.சிவநாயகம் , த.சிவராம் என்று தொடங்கும் நீண்ட பரம் பரியமும் முதலில் மத்திய கல்லூரியிலும் பின்னர்
புனித மிக்கேல் கல்லூரியிலும் படித்த சுவாமி விபுலானந்த அடிகள் முதல் வீ.சீ.கந்தையா ,F.X.C.நடராசா அடங்கலாக தமிழ்,இலக்கிய,வரலாற்றுப் பாரம் பரியத்தைக் கொண்ட பலரை தந்த பூமி மட்டக்களப்பு.

இலங்கயின் முதல் பாடசாலைகளுள் ஒன்றாக 1814 இல் ஆரம்பிக்கபட்ட மெதடிஸ்த மத்திய கல்லூரியும் மட்டுநகரின் சிறப்புகளில் ஒன்று.அந்த மண்ணில் வளர்ந்த பயின்ற நாம் அந்தச் சிறப்புகளில் இருந்தே எமது பயணத்தை தொடங்கினோம்.

மட்டக்களப்ப பத்தி இன்னும் நிறய சொல்லித்தே இரிக்கலாம். மறுகா எழுதுரதுக்கு இடம்பத்தாம போயிரும்.

அதால, அடுத்த இடுகைகளில்
பல்வேறு தகவல்கள் சுவாரஷ்யமான செய்திகளோடு சந்திப்போம்.

என் இனிய மத்திய கல்லூரி நண்பர்களே நீங்களும் இணைந்து கொள்ளூங்கள்

நான் விளையாடிய கடற்கரை. . .

இரண்டு வருடங்களுக்கு முன்புவரை இந்த மண்ணில் எத்தனை கதைகள் எவ்வளவு விளையாட்டுக்கள். ஒவ்வொரு பௌர்ணமியிலும் கூட்டமாக நண்பர்களோடு அரட்டையடடித்த, குளித்துமகிழ்ந்த கடற்கரை.கல்லடிக் கடற்கரைக்கு போகாத மட்டுநகரவாசிகள் மிகக் குறைவு.2004 சுனாமிப் பேரலை வருவதற்கு முன்புவரை மகிழ்விக்குமிடம் இப்போது மரணித்துப் போனவர்களின் நினைவுகளைத் சுமந்தபடி . . .

இலங்கையின் கிழக்குப் பகுதி கடற்கரைகளில் அழகுக்கு பஞ்சமிருக்காது.மட்டக்களப்பு நகரில் இருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலிருக்கும் கல்லடிக் கடற்கரை தினமும் சுறுசுறுப்பான இடம்.அருகே இருக்கும் இலங்கை இராணுவத்தின் பாரிய முகாமைத் தவிர இந்த கடற்கரைக்கு வேறு தொல்லைகள் எதுவும் இல்லை.மட்டக்களப்பில் இராணுவம் பயிற்சி எடுக்கும் பிரதான முகாம் இங்குதான் உள்ளது. ஒவொரு நாளும் பல மனி நேரம் கடலை நோக்கி அவர்கள் சுடுகிற சத்தம் காதடைக்க வைக்கும்.இதனால்தான் என்னவோ கடலுக்கு கோபம் வந்து ஏராளமான இராணுவத்தினரையும் சேர்த்து 2004 டிசம்பர் 26 ல் பலிவாங்கியிருகிறது.
இந்த இராணுவ முகாமில்தான் 90களிலும் அதற்கும் முன்பும் ஏராளமான தமிழ் போராளிகள் சிறை வைக்கப் பட்டிருந்தார்கள் பல இளைஞர்கள் கொலை செய்யப் பட்டதும் இந்த முகாமில் வைத்துத்தான்.மட்டக்கள்ப்பு முகத்துவாரத்தில் இருந்து தொடங்கும் நீணடகடற்கரை பொத்துவில் வரை நீண்டு செல்கிறது. இந்த நீண்ட பகுதியின் மிக அழகான மக்கள் இளைப்பாறூம் கடற்கரைப் பகுதியே கல்லடி கடற்கரை

இந்த கடற்கரையில் ஒரு மாதா கோயில் இருந்தது செவ்வாய்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் இங்கு மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு நடத்தப் படும். நாம கண்டிப்பா ஞாயிற்றுகிழமை போவம் அப்பதான் நிறய கூட்டம் வரும்.( நிறையப் பொம்பிளப் பிள்ளையளும் வரும்...ஹி...ஹி..)மறுகா அங்க நாவலடி ரோட்டில இருகிற கிழங்கு கடையில் கிழங்கு வாங்கித்து கடற்கரையில இரிந்தமெண்டா ஆமிகாரன் வீட்ட பொக சொல்லும் வரைக்கும் அங்கதான் கிடப்பம்.(அப்பப்ப மட்டக்களப்பு தமிழ் சொல்லுறன் முழுதையும் பேச்சுவழக்கில எழுதினா நிறயப் பேருக்கு புரியாது.)



(மேலே உள்ள படத்தில் உள்ளதுதான் மாதா கோவில் சுனாமி நடந்த மறுவாரத்தில் இந்த எடுத்தது.)

[மட்டக்களப்பு கிழங்கும் பாபத்தும் பிரபல்யமான மாலை நேர சிற்றூண்டிகள் இன்னுமோரு பதிவில் அவற்றைப் பற்றி விபரமமக சொல்லுறன்.]

பீர் போத்தல்கள் சகிதம் நம்மட பெடியளெல்லாம் கடல்ல குளிப்பாங்கள்(நான் அப்ப குடிக்கிறதுக்கு எதிர். . நம்புங்க).காலையில போனா மத்தியானத்துக்கு மேலையும் அங்க இருந்து நிறைய விளையாடுவம்.கடற்கரைத் தென்னமரங்களில இளநீர் புடுங்கிக் குடுடிப்பம், கடற்கரைக் கால்ப் பந்தாட்டம், மல்யுத்தம்,கிறிகெற், கபடி இப்படி விளையாடுறதும் காத்தான்குடியில வாங்கி வந்த சமுசா(உள்ள மாட்டீறச்சி போட்டிரிக்கும்)இறச்சிப் பொரியல், கிழங்கு பொரியல், பாபத் எண்டு சாப்பிடுறது எந்த ஊரிலையும் கிடைக்காதவொன்று.ஒருமுறை நாங்கள் செய்யுறது போல கடற்கரையில ஒரு மகளிர் பாடசாலைப் பிள்ளையளும் பியரடித்த்தாக கதை வந்தது அதுக்கு பிறகு பெடியங்கள் அந்த பாடசாலைப் பிள்ளையள் எல்லாரையும் இதச் சொல்லி பகிடி பண்ணுவாங்கள். இது ஒரு காலாசர சீரழிவெண்டு நாங்களும் பட்டிமன்றத்தில பேசினாங்கள். பத்திரிகையிலையும் இப்பிடியொரு விசயம் நடந்ததாய் கிசுகிசு வில போட்டவனுகள். இப்ப இதை நினைக்க வெட்கமாய் எனக்கு இருக்கு எவ்வளவு மோசமான ஆண் மனோநிலையில் நாங்கள் வளர்க்கப் பட்டிருகிறோம்.என்னைப் போல் அனுபவத்தை அங்கிருந்த ஒரு பெண்ணால் எழுத முடியுமா?கடற்கரையில் பியரடிப்பதும் பின்னர் குளிப்பதும் தவறானது. அது யாராகவிருந்தாலும். அந்தக் கடற்கரையில் எனக்கு தெரிந்து ஆறேழு பேர் கடலில் குளிக்கும் போது இறந்திருப் பார்கள்.முழுநிலா வரும் நாட்களில் எக்கச்சக்க கூட்டம் வரும் நாங்களும் கண்டிப்பக போவம். ஆண்கள் பாடசாலயில் படிக்கும் எங்களுக்கு சக மாணவிகளைப் பார்த்து சிரிப்பதற்காவது கிடைக்கும் அரிய சந்தர்ப்பம்.இந்த நேரத்தில் குடும்பம் குடும்பமாக வருவார்கள். நண்பர்களுக்கு காதலியைக் காட்டுவதற்கும் இந்த பொழுதே உதவியது.பெரும்பாலும் பெண்களும் இப்படியே செய்தார்கள்.(சோமிட மாமாவு குடும்பமாய் வாரார்டோய். . . நண்பர்கள் கத்தியது நினைவிருகிறது. )முதல் ஒருகாலத்தில் பிரச்சனை பெரிசா இல்லாத போது இந்த கடற்கரையில் சிறிய ஊணவகம் தங்கும் விடுதி ஒன்று இருந்ததெண்டும் அப்பவெல்லாம் அடிகடி காணிவெல் நடக்குமெண்டும் பெரியாக்கள் சொல்லுவாங்கள். நான் அறிஞ்சு ஆமி காட்டுற காணிவெல்லத்தவிர வேறயேதும் நடக்கையில்ல(?) ஆனால் அந்த கடற்கரைக்கு ஏதோ ஒரு சிறப்பு இருந்தது.மட்டக்களப்பில் நடக்கும் அம்மன் சடங்குகளின் இறுதியில் உருவாடும் தெய்வங்களும், பூசாரிகளும், பொது மக்களும் இங்கு வந்து பூசை நடத்துவது வழமை. தாமரைக்கேணி மாரியம்மன் திருவிழாவின் போது பலமுறை நான் இப்படிப் போயிருகிறேன்.இது தவிர சில ஆகமக் கோவில் சாமிகள் தீர்த்தத் திருவிழவின் போது இங்கு தீர்த்தமாடுவதுமுண்டு.இங்கு ஒரு பகுதியில் மீன்பிடிப்பார்கள் இந்தபகுதி முழுவதிலும் மீன்வாடிகளைப்(மீனவர் ஒYவெடுக்கும் இடம்) பார்க்கலாம்.ஏலேலோ பாட்டு பாடிய படியே கரைவலை போட்டு இழுத்து வருவார்கள் எக்கச்சக்க மீன் படும் அப்ப பக்கத்தில நிண்டா நல்ல மலிவா மீன் வங்கலாம். எனக்கு பிடித்த மான மாப்பிளைக்கீரி மீன் சில காலங்களில் அதிகம் பிடிபடும்(இதை தமிழகத்தில் மத்தி மீன் என்கிறார்கள்.மட்டக்களப்பு நகரத்தில இருந்து மூன்று சோதனைச் சாவடிகளைக் கடந்து கடற்கரைக்கு சென்று விட்டு வீடு திரும்புவது என்பது ஒரு சுகமான அனுபவம்.இன்று தொடர்பில் கூட இல்லாத என் நண்பர்கள் பலருக்கும் இன்னமும் இந்த நினைவுகள் இருக்கலாம்இன்று . . ."கடற்கரைக்கு முதல் நாம போன போல இப்ப போறல்லடா அதுக்கு சுனாமி மட்டும் காரணமில்ல அங்க நிக்கக்குள்ள யார் எப்ப எவன கடத்துவானெண்டு தெரியா இப்ப வேலைக்கு போயித்து வந்தா வீட்டுகுள்ள கிடக்குறதான்.எப்பயாவது கடற்கரை எப்பிடியிருகெண்டு போயி பாப்பம். கிழங்குக் கடையளும் குறைஞ்சு போயித்து" என்று எனது நண்பன் நான் போனபோது சொன்னான்.ம்......பெருமூச்சு விட்டபடியே மீண்டும் பழைய நினைவுகளை அசைபோட்டபடி கனவுகளுக்காக தூங்குவதைத் தவிர என்னால் என்ன செய்ய முட்யும்.